அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி நல்லூரில் கவனயீர்ப்பு போராட்டம்

by Staff Writer 28-12-2020 | 9:35 PM
Colombo (News 1st) அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி நல்லூரில் இன்று (28) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் என இதன்போது ​கோரிக்கை விடுக்கப்பட்டது. யாழ். நல்லை ஆதீனத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் மத தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். சிறைச்சாலைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை கூறியுள்ளார்கள் அரசாங்கத்தின் சில அமைச்சர்கள். இவர்களை பொறுத்தவரையில் சாதாரண சட்டத்தின் கீழ் இவர்களை கொண்டு வரவில்லை. அவர்களை கைது செய்தது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ். பயங்கரவாத தடைச் சட்டம் வழமையான இந்தநாட்டின் சட்டத்திற்கு எதிரான சில விடயங்களை கொண்டுள்ளது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து அவர்களுக்கு தண்டனை வழங்கலாம் என அது எங்கள் சட்டத்தில் இல்லை
என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மெகசின் சிறைச்சாலையில் மட்டும் 64 அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். அதில் 14 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 14 பேருக்குமே கொரோனா என்று உறுதிப்படுத்தப்பட்டுளளது. மிகுதி 50 பேருக்கும் PCR பரிசோதனை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்ப உறவினர்கள் அறியதட தந்துள்ளார்கள். ஆகவே அரசியல் கைதிகளின் உயிருடன் விளையாட வேண்டாம்
என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கே. சுகாஸ் கூறினார்.
இளைஞர்கள் 15, 20 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் கூட அவர்களுக்கு நீதி கிடைக்காது  இன்றைக்கு அவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நோயின் காரணத்தை கண்டாவது அவர்களுக்கு பிணையிலாவது அவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும். எத்தனையோ கொடிய குற்றங்கள் இழைத்தவர்களை நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய எத்தனையோ பெயரை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். மனித உரிமை பிரேரணைகள் அடுத்த ஆண்டு வருவதற்கு முன்னர் இந்த அரசாங்கம் நீதியை வழங்குவதாக இருந்தால் அவர்கள் அப்படி அந்த அரசாங்கம் செவி சாய்க்காவிட்டால் மனித உரிமை பேரவையின் சர்வதேச சமூகம் இந்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்
என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டார். அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்திலாவது பொறுப்பு கூறல் எனும் செயற்பாட்டினை முன்னெடுத்து எமக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவித்தார். கொரானாவினால் பாதிக்கப்பட்டு அரசியல் கைதிகளை உடனடியாக விடுவித்து அவர்களுக்கான உடனடியாக விடுவித்து அவரவர் மத ஏற்றுவாறு சுதந்திரமாக நாட்டில் சுதந்திரமாக வாழ சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு முஸ்லிம் மதகுரு ஒருவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.