by Bella Dalima 22-12-2020 | 4:16 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்திலிருந்து வௌி மாவட்டங்களுக்கு வௌியேறும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி 11 இடங்களில் நாளை (23) முதல் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், அதிவேக வீதியின் வௌியேறும் பகுதிகளிலும் நாளை முதல் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் 04 இடங்களில் மாத்திரமே இதுவரை கொரோனா தொற்றுக்கான பரிசோதனை எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்டது.
எனினும், நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் அனைத்து பகுதிகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மேல் மாகாணத்திலிருந்து செல்லக்கூடிய கொரோனா நோயாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதும், புதிய கொத்தணி உருவாவதை தடுப்பதுமே இதன் நோக்கம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி தவிர்ந்த, தீபாவளி பண்டிகையின் பின்னர் மலையகத்தின் பல பகுதிகளில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
எனவே, பண்டிகைக் காலத்தில் புதிய கொத்தணிகள் உருவாவதை தடுக்கும் நோக்கில் நாளை முதல் விசேட சோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.