மஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 4 கைதிகளின் உடல்களை அடக்கம் செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

by Staff Writer 16-12-2020 | 6:27 PM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் உயிரிழந்த நான்கு கைதிகளின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கோரி அவர்களது உறவினர்கள் விடுத்த கோரிக்கையை வத்தளை நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இன்று நிராகரித்துள்ளார். கைதிகளின் உடல்களை உடனடியாக தகனம் செய்யுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் உயிரிழந்த 11 கைதிகளில் இதுவரை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள COVID தொற்றுக்குள்ளான நான்கு கைதிகளின் உடல்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு அவர்களது உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். மஹர சிறைச்சாலை அமைதியின்மையின் போது உயிரிழந்த 11 கைதிகளில் நான்கு கைதிகளது மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இரகசிய அறிக்கைகளாக அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானமையே இவர்களது மரணத்திற்கான அடிப்படை காரணம் என அந்த அறிக்கைகள் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைதிகளின் மரணங்கள் இயற்கை மரணங்கள் அல்லாத ஆட்கொலைகள் என்பது தெரியவந்துள்ளதால், உடல்களை தகனம் செய்தால் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கலாம் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். வழக்கு விசாரணைகளின் போது ஏதேனும் தேவை ஏற்பட்டால் அவற்றை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை நடத்துவதற்கு ஏதுவாக உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்பது உறுதியாகியுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதன்போது நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். அத்தோடு, தேவையான மாதிரிகள் சடலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அதற்கு அனுமதி வழங்கினால் தற்போது சமூகத்தில் பரவுகின்ற கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் சட்டத்தரணி கூறினார். இந்த விடயங்களை கவனத்திற்கொண்ட நீதவான் கைதிகளின் உடல்களை தகனம் செய்வதால் எதிர்கால விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அறிவித்துள்ளார். இதற்கமைய, கைதிகளின் நான்கு உடல்களையும் உடனடியாக தகனம் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் மேலதிக விசாரணையை 18 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான் ஏனைய ஏழு கைதிகளினதும் பிரேத பரிசோனை அறிக்கைகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களில் 08 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்டது. இதனால் கைதிகளின் பிரேத பரிசோதனைக்காக ஐந்து நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.