உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவியமை குறித்து CID விசாரணை

by Staff Writer 16-12-2020 | 7:35 PM
Colombo (News 1st) கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவிய சம்பவம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நேற்று நியமிக்கப்பட்டன. அத்துடன், பொலிஸாரின் விசேட அணிகள் சில இன்று விசாரணைகளை ஆரம்பித்தன. சம்பவம் தொடர்பாக வாழைத்தோட்டம் பொலிஸார் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விடயங்களை சமர்ப்பித்தனர். உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் கீழ் தளத்திலுள்ள சேதமடைந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் நேற்று பிற்பகலில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் குறித்த களஞ்சியசாலையைத் தவிர ஆவணங்களோ அல்லது வேறு சொத்துக்களோ பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.