கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,021 ஆக அதிகரிப்பு

by Staff Writer 08-12-2020 | 3:45 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் இதுவரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 25,021 ஆக அதிகரித்துள்ளது. மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புபட்ட 3,059 பேருக்கும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய 21,962 பேருக்கும் இதுவரை COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 17,396 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 703 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID-19 தொற்று தடுப்பிற்கான தேசிய செயலணி கூறியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 371 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 102 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 64 பேரும் நேற்று அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் உள்ளடங்குகின்றனர். நாட்டில் இதுவரை 28,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 20,803 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா முடக்கல் நிலையால் வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 480 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர். பஹ்ரேனிலிருந்து 290 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 44 பேரும் கட்டாரிலிருந்து 141 பேரும் இன்று நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தரவுகளின் அடிப்படையில், நாட்டில் முப்படையினரால் கண்காணிக்கப்படும் 64 மத்திய நிலையங்களில் 6,878 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 13,831 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.