கொரோனா தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம்

COVID-19 தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம்

by Bella Dalima 30-11-2020 | 9:03 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றினால் ஆபிரிக்க கண்டத்தின் துணை சஹாரா பிராந்தியத்திற்காக வழங்கப்படும் நிதியில் காணப்படும் பற்றாக்குறை மற்றும் சிகிச்சைகளில் நிலவும் குறைபாடுகள் காரணமாக மலேரியா நோயாளர்கள் பாதிக்கப்படுவதாக ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு மலேரியாவால் பீடிக்கப்பட்டோருக்கான உரிய சிகிச்சைகளை வழங்க கவனம் செலுத்தப்பட வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. ஆபிரிக்க துணை சஹாரா பிராந்தியத்தில் மலேரியாவால் பீடிக்கப்பட்டோருக்கான உரிய சிகிச்சைகள் 10 வீதமாவது வழங்கப்படாத போது, கொரோனா மரணங்களையும் தாண்டி மேலதிகமாக 19,000 மரணங்கள் வரை பதிவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 25 வீத சிகிச்சை வழங்கப்படாத போது, மரணங்களின் எண்ணிக்கை 46 ஆயிரமாகவும் 50 வீத சிகிச்சை வழங்கப்படாதவிடத்து ஒரு இலட்சம் மரணங்கள் வரை பதிவாகுமெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.