by Staff Writer 27-11-2020 | 8:44 PM
Colombo (News 1st) 8 தொழிற்சங்கங்களை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை இன்று ஆரம்பித்தனர்.
வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க நேற்று முன்தினம் (25) வனவிலங்குகள் அதிகாரிகளுடன் செயற்பட்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை வேஹேரகொடயாயவிலுள்ள மக்களை சந்திப்பதற்காக வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் நேற்று முன்தினம் விஜயம் செய்திருந்த போது, பொலன்னறுவையிலுள்ள தேசிய சரணாலயமொன்றுக்கு உள்வாங்கப்பட்ட தமது காணியை திருப்பித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், தமது பசுக்களை அந்த சரணாலயம் மற்றும் சோமாவதி தேசிய பூங்காவிற்குள் கொண்டு சென்று மேய்ப்பதற்கு அனுமதி தருமாறும் அந்த மக்கள் இராஜாங்க அமைச்சரிடம் கோரினர்.
எனினும், அவ்வாறு அனுமதி அளிக்கப்படுவதன் ஊடாக ஏற்படக்கூடிய சூழல் மாசு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதன்போது அதிகாரிகளுக்கும், இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.