by Staff Writer 20-11-2020 | 4:33 PM
Colombo (News 1st) சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லம்பிட்டிய - வென்னவத்தை முகாம் மற்றும் திணைக்களத்தின் கீழ் கட்டுநாயக்கவில் இயங்கும் அலுவலகம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
சாரதியாக பணியாற்றும் ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டமையினால் வென்னவத்தை முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனால், அங்கு சேவையாற்றும் சிவில் பாதுகாப்பு படையின் சிப்பாய்கள் 70 பேரையும் முகாமிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், முடிவுகள் கிடைக்கவுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சிவில் பாதுகாப்பு படைப்பிரிவின் அலுவலகத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினால், அங்குள்ள 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.