பயணத்தடையை மீறுவோரை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை

பயணத்தடையை மீறி மேல் மாகாணத்திலிருந்து வௌியோருவோரை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை 

by Staff Writer 12-11-2020 | 9:22 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணத்தடையை மீறுவோரை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பயணத் தடை அறிவிக்கப்பட்டதன் பின்னர், எவரேனும் இன்று (12) காலை முதல் மேல் மாகாணத்திலிருந்து பிற பகுதிகளுக்கு சென்றிருப்பார்களாயின் அவர்களை தனிமைப்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ​ எவரேனும் மேல் மாகாணத்தின் ஏதேனுமொரு பகுதியிலிருந்து வருகை தருவார்களாயின் அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு ஹோட்டல்கள் மற்றும் வாடி வீடுகள் ஆகியவற்றின் உரிமையாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினரும் இது குறித்து ஆராய்வதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் சேவைக்கு சமூகமளிப்பதற்காக 112 அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்த அனுமதி மேல் மாகாணத்திலிருந்து வௌியேறுவதற்கு பயன்படுத்த முடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் அனைத்து நுழைவாயில்களிலும் வீதி தடைகள் போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகள் குறித்தும் ரயில்வே திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ரயில்களில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், மேல் மாகாணத்தில் இருந்து வௌியேற அனுமதி வழங்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பெலியத்த, கண்டி, மஹவ, புத்தளம், அவிசாவளை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் குறித்த மார்க்கங்களில் பயணிக்கும் ஏனைய ரயில்கள் இன்று முற்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பிற்பகல் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு மேல் மாகாணத்தினுள் அமைந்துள்ள இறுதி ரயில் நிலையமான அளுத்கம, அம்பேபுஸ்ஸ, கொச்சிகடை, அவிசாவளை வரை கொழும்பில் இருந்து பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.