முன்னர் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் செல்லாது

முன்னர் வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரம் தற்போது செல்லாது

by Staff Writer 10-11-2020 | 12:11 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரம், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் செல்லுபடியாகாது என பொலிஸார் அறிவித்துள்ளனர். நேற்று (09) அதிகாலை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. அவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகாது என பொலிஸார் அறிவித்துள்ளனர். தொழில் நிமித்தம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் பிரவேசிக்க அல்லது அங்கிருந்து வௌியேறுவதற்கான அனுமதியை பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர் ஊடாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பத்திரத்தில் பெயர், முகவரி, நிறுவனத்திற்கு அழைக்கப்படும் திகதி, ஊழியர் நிறுவனத்திற்கு வரும் வாகனம் தொடர்பிலான தகவல் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன், ஊழியர் நிறுவனத்திற்கு அழைக்கப்படுவதற்கான காரணம், நிறுவன தலைவரின் விபரங்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அனுமதி வழங்கப்படும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.