by Staff Writer 07-11-2020 | 8:18 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவும் இரண்டு வார்ட்களும் மூடப்பட்டுள்ளன.
தொற்றுக்குள்ளானவர் கையில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து கட்டுவதற்காக வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரும் அலுவலக உத்தியோகத்தர்கள் 20 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அமைச்சின் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஹபராதுவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் அவரது மகன்கள் இருவர் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினர் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் அதிகாரி கொழும்பு 7 பொலிஸ் குடியிருப்பில் தங்கியுள்ளவர் என நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், குணசிங்கபுர பகுதியில் இன்று முற்பகல் PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
பழைய போகம்பரை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இவர்கள் தொற்றுக்கு இலக்கானமை தெரியவந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 196 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளான 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளானவர்கள் வெலிக்கந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பொலன்னறுவை வெலிகந்த COVID-19 தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.