இலங்கை வருகிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்

இலங்கை வருகிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ

by Fazlullah Mubarak 26-10-2020 | 12:22 PM

ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய விஜயத்தின் பின்னர் அவர் நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இந்திய விஜயத்துடன் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரும் இணைந்து கொள்ளவுள்ளார். இரு தலைவர்களும் நாளைய தினம் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராஜ்நாத் ஆகியோரை சந்திக்கவுள்ளனர். இரு நாடுகள், வலயம் மற்றும் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், இந்திய பசுபிக் வலய நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு சீனாவினால் மேற்கொள்ளப்படும் முயற்சி தொடர்பிலும் இந்த விஜயத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், அமெரிக்க அதிகாரிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளனர். இந்திய விஜயத்தை நிறைவு செய்து, அமெரிக்க அதிகாரிகள் நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளதுடன், இந்த விஜயத்தில் நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் வௌிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளனர். வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் நாட்டுக்கு வருகை தரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரி, மைக் பொம்பியோ என்பதும் குறிப்பிடத்தக்கது.