மட்டக்குளி உள்ளிட்ட 5 பகுதிகளில் ஊரடங்கு சட்டம்

மட்டக்குளி உள்ளிட்ட 5 பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் 

by Staff Writer 22-10-2020 | 8:12 AM
Colombo (News 1st) மட்டக்குளி, கொழும்பு முகத்துவாரம், புளுமென்டல், கிரேண்ட்ஸ்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (26) காலை 05 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தர். குறித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட COVID - 19 தொற்றாளர்களை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் திட்டங்களை மேற்கொள்வதற்காகவே இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் மக்களை தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளும் அதேநேரம், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளூடாக வாகனங்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் குறிப்பிட்ட பிரதேசங்களில் வாகனங்களை தரிப்பதற்கோ நிறுத்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என கூறினார். ஆகவே, மட்டக்குளி, மோதரை, புளூமென்டல், கிரேண்ட்ஸ்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு வாழும் மக்களை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தங்களுக்கு நோய் தொடர்பிலான அறிகுறிகள் எதுவும் தென்படுமிடத்து வீடுகளிலேயே தங்கியிருந்து பொலிஸாருக்கும் அறிவிக்க முடியும் எனவும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண விளக்கமளித்துள்ளார்.