கொட்டாஞ்சேனையில் இன்று மாலை 06 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்

by Bella Dalima 22-10-2020 | 3:39 PM
Colombo (News 1st) கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று மாலை 06 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. COVID-19 தொற்று ஒழிப்பு தொடர்பான விசேட செயலணியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார். கொழும்பில் 05 பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. கொழும்பு - 15 முகத்துவாரம், மட்டக்குளி, ப்ளூமெண்டல், கிரேண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 05 மணி வரை இந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி தெரிவித்தார். பேலியகொடை மொத்த மீன் விற்பனை சந்தையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக கடந்த வாரத்தில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றவர்கள் தங்களின் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரை சந்தித்து PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்தார்.