by Staff Writer 21-10-2020 | 4:03 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 44 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,501 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 5,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 2,297 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 109பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 49 பேர் பேலியகொட மீன்சந்தை தொகுதியில் பணியாற்றியவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் முகாம்களில் இருக்கும் 37 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், ஏனைய 23 பேரும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களாவர்.
அதற்கு அமைவாக, மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2451 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தது.
இதேவேளை, பாணந்துறை மற்றும் மத்துக பகுதிகளில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 06 பேர் அடையாளங்காணப்பட்டனர்.
களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.
தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள மத்துகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒவிட்டிகல, பதுகம மற்றும் பதுகம புதிய குடியேற்றங்களை அண்மித்த பகுதிகளில் PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக கொரோனா நோயாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக களுத்துறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே கூறியுள்ளார்.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரமித்தா ஷாந்தி லதா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள குளியாப்பிட்டிய பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட ஐந்து பொலிஸ் பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.