ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை 

by Staff Writer 13-10-2020 | 2:15 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களை கைது செய்ய பிடியாணை அவசியமற்றதென கோட்டை நீதவான் பிரியந்த லியனகே தெரிவித்துள்ளார். இதற்கிணங்க செயற்பட்டு நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கினார். அரச நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் பிடியாணை பெற்று அவரைக் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். இந்நிலையில், பிடியாணையின்றி ரிஷாட் பதியுதீனை கைது செய்ய முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சட்டத்திற்கமைய அவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை, அரசியல் காரணங்களுக்காக தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். மனு பரிசீலனைக்குட்படுத்தப்படும் வரை தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தாம் 5 மாதங்களுக்கும் அதிகக் காலம் தடுத்து வைப்பு உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். எந்த தாக்குதலிலும் தாம் தொடர்புபடவில்லையென்பது விரிவான விசாரணைகளில் தெரியவந்ததை தொடர்ந்து தாம் விடுவிக்கப்பட்ட ​போதிலும் அரசியல் காரணங்களுக்காக தாம் மீண்டும் கைது செய்யப்படும் முயற்சி காணப்படுவதாக ரியாஜ் பதியுதீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனு பரிசீலிக்கப்பட்ட பின்னர் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் ரிட் மனுவொன்றை பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு விடுக்குமாறு அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.