'ஊரடங்கு தொடர்பிலான வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம்'

ஊரடங்கு சட்டம் தொடர்பிலான வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு 

by Staff Writer 05-10-2020 | 6:51 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் நாளைய தினம் (06) ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற உண்மைக்கு புறம்பான பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்கம் இன்று (05) பிற்பகல் வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்களை தௌிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அல்லது அரச தகவல் திணைக்களம் விடுக்கும் விசேட அறிக்கைகள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் மாத்திரம் பிரசுரிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு COVID - 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தொற்று பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று கொவிட் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடியுள்ளார். கொவிட் நோயாளிகளுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களை அடையாளம் கண்டு தொற்று பரவுவதை தடுப்பதற்காக PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார். தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் வீடுகளிலிருந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதிகளை அண்மித்த ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். கொவிட் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் வழங்கியிருந்த அறிவுறுத்தல்கள், மக்களிடமிருந்து விடுபட்டமையே தொற்று பரவியமைக்கான முக்கிய காரணம் என இதன்போது வைத்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எழுமாறாக PCR பரிசோதனை நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.