by Bella Dalima 02-10-2020 | 5:24 PM
Colombo (News 1st) தன் மீது நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலின் பின்னணியில் ரஷ்ய அதிபா் விளாடிமிர் புதின் இருப்பதாக அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி குற்றம் சாட்டியுள்ளார்.
அத்தகைய குற்றத்திற்கான வேறு சூழலை தன்னால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை எனவும் அலெக்ஸி நவால்னி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபா் புதினுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக அலெக்ஸி நவால்னி உள்ளார்.
அந்நாட்டின் டோம்ஸ்க் நகரிலிருந்து தலைநகா் மாஸ்கோவிற்கு விமானம் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி அவர் சென்றிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
கோமா நிலையில் உயிருக்குப் போராடி வந்த அவர், பொ்லின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், நவால்னிக்கு ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட நோவிசோக் என்ற நச்சுப் பொருள் இரகசியமாக அளிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.
தீவிர சிகிச்சைக்குப் பிறகு கோமா நிலையிலிருந்து மீண்ட நவால்னி, 32 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.