இந்துக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி வவுனியாவில் மாபெரும் எழுச்சிப் பேரணி

by Staff Writer 01-10-2020 | 8:54 PM
Colombo (News 1st) இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மாபெரும் எழுச்சிப் பேரணியொன்று வவுனியாவில் இன்று நடைபெற்றது. ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட பேரணியை இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன. வவுனியா - குருமன்காடு காளிகோவில் முன்றலில் இன்று காலை ஆரம்பமான எழுச்சிப் பேரணி, குருமன்காட்டு சந்தி, புகையிரத நிலைய வீதி ஊடாக நகர மத்தியிலுள்ள மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று பசார் வீதி, சூசைப்பிள்ளையார் குளமூடாக வவுனியா கந்தசுவாமி கோவிலடியை சென்றடைந்தது. இந்து கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு அம்சங்களும் பேரணியில் இடம்பெற்றிருந்தன. நல்லை ஆதீனத்தின் இரண்டாம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார், வேலர் சுவாமிகள் சிவஶ்ரீ முத்துஜெயந்திநாதக் குருக்கள், சிவஶ்ரீ பிரபாகரக் குருக்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான குருக்கள்மாரும் பேரணியில் இணைந்திருந்தனர். பசு வதையை தடுக்கும் சட்டம், மதமாற்றத் தடுப்பு சட்டம், இந்து மதம் சார்ந்த புராதன இடங்களில் இந்து மதம் சார்ந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்க வழிபாடுகளில் ஈடுபட ஆவண செய்தல், ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ஏனைய வகுப்புகள், நிகழ்வுகளை தடை செய்தல் ஆகிய கோரிக்கைகள் இதன்போது வலியுறுத்தப்பட்டன வவுனியா மாவட்டத்தில் பல கிராமங்களின் இந்து மதம் சார்ந்த பெயர்களை மாற்றுவதை தவிர்த்து, தமிழ் மொழி சார்ந்த பழமை வாய்ந்த பெயர்கள் நீடிக்க ஆவண செய்ய வேண்டுமெனவும் இந்து அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. கந்தசுவாமி கோவிலில் வைத்து பிரதமருக்கு வழங்குவதற்கான மகஜர் இந்து மத குரு பீடத்தின் தலைவரான ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியாரிடம் கையளிக்கப்பட்டது.