திருப்பியனுப்பிய கொள்கலன்கள் குறித்து விசாரணை

இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை 

by Staff Writer 29-09-2020 | 8:14 AM
Colombo (News 1st) இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட குப்பைகள் அடங்கிய 21 கொள்கலன்கள் தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட 21 கொள்கலன்கள் மற்றும் ஏனைய 242 கொள்கலன்கள் தொடர்பில் தனித்தனியே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் கூறியுள்ளது. விசாரணைகள் நிறைவு பெற்றதன் பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனினும், விசாரணைகள் நிறைவு பெறும் வரை நட்ட ஈடு தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் சுங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. குப்பைகள் அடங்கிய 21 கொள்கலன்கள் நேற்று முந்தினம் மாலை கொழும்பு துறைமுகத்திலிருந்து இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இங்கிலாந்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட குப்பைகள் அடங்கிய 263 கொள்கலன்கள் 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை நாட்டிற்குள் காணப்பட்டதாக சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், அண்மையில் சர்ச்சையை தோற்றுவித்த 242 குப்பைகள் அடங்கிய கொள்கலன்களுள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டுள்ள 21 கொள்கலன்கள் உள்ளடக்கப்படவில்லை என சுங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.