ரயில் அபிவிருத்தி திட்டங்களை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம் 

by Staff Writer 23-09-2020 | 11:31 AM
Colombo (News 1st) கொழும்பு - மாலபே இலகு ரயில் திட்டம் உள்ளிட்ட (LRTS) சில ரயில் அபிவிருத்தி திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது நிலவும் வெளிநாட்டு பரிமாற்ற சிக்கல்கள் காரணமாக நிதி அமைச்சின் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மொண்டி ரணதுங்க தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, குறித்த அனைத்து வேலைத்திட்டங்களையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் கொழும்பு ரயில் மார்க்கம், பாணந்துறை - கொழும்பு ரயில் மார்க்கம் உள்ளிட்ட ரயில் மார்க்கங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய தேவையான வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி குறித்த வேலைத்திட்டம் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மொண்டி ரணதுங்க தெரிவித்துள்ளார்.