நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 14 பேருக்கு அறிவித்தல்

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன உள்ளிட்ட 14 பேருக்கு அறிவித்தல்

by Staff Writer 17-09-2020 | 7:03 PM
Colombo (News 1st) எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன உள்ளிட்ட 14 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ரஞ்சித் அலுவிகார தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையின் போது இன்று இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி A.H.D. நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரால் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குகளை மீள கணக்கிட உத்தரவிடுமாறு கோரி ரஞ்சித் அலுவிகார இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். பொதுத்தேர்தலில் ரோஹினி கவிரத்ன பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட போதும், அவரை விட 416 மேலதிக விருப்பு வாக்குகளை தாம் பெற்றுக்கொண்டுள்ளதாக மனுவில் அவர் கூறியுள்ளார். சில வாக்கெண்ணும் நிலையங்களில் மோசடிகள் இடம்பெற்றமையால் தனக்குரிய விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் ரஞ்சித் அலுவிகார தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர், பிரதி தெரிவத்தாட்சி அலுவலகர், வாக்கெண்ணும் நிலையத்தின் தலைமை தாங்கும் அதிகாரி, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்