Colombo (News 1st) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் குறித்து COVID-19 ஒழிப்பு படையணியுடனும் சுகாதார அதிகாரிகளுடனும் கலந்துரையாடுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள தமது அணி வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹசான் கூறியுள்ளார்.
தமது அணி வீரர்களால் 14 நாட்களுக்கு ஹோட்டலில் முடங்கியிருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனம் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள நிலையில், கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
இதன்போது,
பங்களாதேஷ் விஜயம் தொடர்பாக சுகாதார அமைச்சு வழங்கிய பரிந்துரை கிரிக்கெட் நிறுவனத்தால் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் சிலவற்றை நடைமுறைப்படுத்தும் போது மாற்றுத் திட்டத்தைக் கையாள வேண்டி ஏற்படலாம். அதன் பிரகாரம் மீண்டும் ஒருமுறை கொரோனா ஒழிப்பு படையணியுடன் கலந்துரையாடுமாறு கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்தத் தொடரை நாட்டில் நடத்த முடியுமா என்பதை கிரிக்கெட் நிறுவனம் COVID ஒழிப்பு படையணியை சந்தித்து கலந்துரையாடி தீர்மானிக்கும்
என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.