by Bella Dalima 11-09-2020 | 5:17 PM
உடல்நலக்குறைவால் வடிவேல் பாலாஜி மரணமடைந்த நிலையில், அவரின் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேல் பாணியில் நகைச்சுவைகள் செய்ததால், வடிவேல் பாலாஜி என்று அழைத்தனர்.
அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். அதன்பிறகு பட வாய்ப்புகள் வந்தன. கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கை, கால்களும் செயலிழந்தன. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி வடிவேல் பாலாஜி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45.
வடிவேல் பாலாஜிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது திடீர் மரணம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அவரது இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.