பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம்: ஐக்கிய மக்கள் சக்தியினர் வௌிநடப்பு

by Staff Writer 08-09-2020 | 3:42 PM
Colombo (News 1st) பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய அமர்விலிருந்து வௌிநடப்பு செய்துள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர, எதிர்க்கட்சியின் எதிர்ப்பிற்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கிய அனுமதிக்கு அமைய, பிரேமலால் ஜயசேகர இன்று பாராளுமன்ற கட்டத் தொகுதிக்கு அழைத்து வரப்பட்டார். இவர் பதவிப்பிரமாணம் செய்த போது எதிர்கட்சியினர் தங்களின் எதிர்ப்பை வௌியிட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கறுப்புப் பட்டி அணிந்து இன்றைய அமர்விற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.