by Staff Writer 05-09-2020 | 7:41 PM
Colombo (News 1st) உலக சனத்தொகையில் 54 வீதமானோர் (3.9 பில்லியன் மக்கள்) நகர்ப்புறங்களிலேயே வாழ்கின்றனர்.
இது 2050 ஆம் ஆண்டளவில் 66 வீதமாக உயரும் என நிபுணர்கள் எதிர்வுகூறுகின்றனர்.
உலகளாவிய ரீதியில் வாகனங்களில் 1.5 வீதமானவை ஆசியாவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலைமை போக்குவரத்துத்துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியது.
வாகனங்களில் இருந்து வௌியேறும் புகையினால் ஏற்படும் வளி மாசடைவால் சுகாதாரம், சுற்றாடல், விவசாயத்துறைக்கு அழுத்தம் விடுக்கப்படுவதுடன், புவி வெப்பமடைவதால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு, வருடாந்தம் 7 மில்லியன் உயிரிழப்பிற்கு இந்த நிலைமை காரணமாகின்றது.
கொழும்பு மாநகரில் வளி மாசடைவிற்கு போக்குவரத்துத்துறையே 60 வீதம் பொறுப்புக்கூற வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான அமைப்பின் 21 ஆவது மாநாட்டில் வரையப்பட்ட உடன்படிக்கையில் 162 நாடுகள் கைச்சாத்திட்டன.
காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக போக்குவரத்துத்துறையினால் சிறந்த திறன்மிக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும் என குறித்த மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறையை மறுசீரமைத்து, நாட்டிற்கு ஏற்புடைய கட்டமைப்பை தயாரித்து நிலையான அபிவிருத்தி எனும் இலக்கை அடைய வேண்டியதே காலத்தின் தேவையாகும்.
பசுமை உலகினை சிருஷ்டிப்பதற்கான பயணத்தில் இந்தக் காரணிகள் முக்கியம் வாய்ந்தவை என்பதில் எள்ளவும் ஐயமில்லை.