கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்துகளில் 11 பேர் பலி; 10 பேர் காயம்

by Staff Writer 22-08-2020 | 8:01 PM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 11 பேர் பலியானதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். அலவ்வ - குருநாகல் வீதியில் இஹல வலகும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அதிகாலை 4.05 அளவில் காரொன்று டிப்பருடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் சாரதி கவனயீனமாக செயற்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டனர். மணல் நிரப்பப்பட்ட டிப்பர் வாகனம் கொழும்பு நோக்கி பயணித்துள்ளதுடன், அதற்கு எதிர்ப்புறமாக அதிவேகமாக வந்த கார் டிப்பருடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது, காரில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 22 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களாவர். குறித்த இளைஞர்கள் மத்திய அதிவேக வீதியின் பொல்கஹவெல - வதாகொட பகுதியில் பணிபுரிந்த ஊழியர்கள் என பொலிஸார் கூறினர். சடலங்கள் அலவ்வ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பிரேதப் பரிசோதனைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞர்கள் நெலும்தெனிய, வெலிமடை, பொட்டுகச்சி, குருநாகல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, எல்ல - வெல்லவாய வீதியில் ராவணா எல்ல பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர். குறித்த வேன் வீதியைவிட்டு விலகி சுமார் 500 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. பிரதேசவாசிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கடும் பிரயத்தனத்தின் பின்னர் விபத்திற்குள்ளானவர்கள் அம்பியூலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். விபத்து இடம்பெறும்போது வேனில் 6 பேர் இருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். விபத்திற்குள்ளானவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர். அவர்கள் பதுளை மின்சார சபையில் பணியாற்றியவர்களாவர். இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் சிரிகல, பதுளை மற்றும் வெல்லவாய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, தம்புத்தேகம பயின்டிகுளம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 1.10 அளவில் கெப் வாகனமொன்று ஏரியாகம ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட வேளை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலில் மோதுண்டு விபத்திற்குள்ளானது. பாதுகாப்புக் கடவை மூடப்படாததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர். விபத்திற்குள்ளானவர்களில் இருவர் தம்புத்தேகம வைத்தியசாலையிலும் ஏனைய ஐந்து பேர் அனுராதபுரம் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழும்பு, தலாவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே காயமடைந்துள்ளனர். எவ்வாறாயினும், விபத்தினால் ரயில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நீர்கொழும்பு திவுலப்பிட்டிய வீதியில் மல்பாம் சந்தியில் மோட்டார் சைக்கிளொன்று பெண் ஒருவர் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். 65 வயதுடைய கொரசவத்த, உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கதங்கொட பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிளொன்றைக் கடந்து செல்ல முயற்சித்த போது குறித்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்திற்குள்ளானது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் 38 வயதுடைய குருவிட்ட பகுதியைச் சேர்ந்தவராவார். விபத்திற்குக் காரணமான லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, பாதுக்க, உடுமுல்ல, மலகல வீதியில் உடுமுல்ல விகாரையை அண்மித்து நேற்றிரவு 11.35 அளவில் விபத்தொன்று சம்பவித்துள்ளது. ஹொரணை பகுதியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வீதியைவிட்டு விலகி அங்கிருந்த கொங்ரீட் தூணில் மோதி விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறினர். விபத்தில் 27 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்ததுடன், அவர் மில்லேவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.