Colombo (News 1st) 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (20) ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் இன்று ஆரம்பமானது.
விவாதத்திற்கான யோசனையை புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவான நிபுண ரணவக்க முன்வைத்தார்.
நிபுண ரணவக்க இம்முறை மாத்தறை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.
இன்று பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு முன்னர் தனது மாமனார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து ஆசி பெற்றார்.
அதன் பின்னர் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் விவாதமான ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாத யோசனையை நிபுண ரணவக்க முன்வைத்தார்.
இதன்போது,
நாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்களை நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு பயன்படுத்தி அவர்களை இணைத்துக்கொண்டு அபிவிருத்தியை நோக்கி செல்வதே ஜனாதிபதியினதும், பிரதமரினதும் எதிர்பார்ப்பாகும். இளைஞர் சமுதாயமொன்று இந்தப் பாராளுமன்றத்திற்கு தற்போது தெரிவாகியுள்ளது. நமது நாட்டில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தேசிய ரக்பி அணியின் தலைவர் பொறுப்பை வகித்தவர் என்பது இளைஞர் என்ற வகையில் எமக்கு பெருமையளிக்கிறது. அதேபோன்று, ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதியின் திட்டத்தை நாம் பெருமையாக மதிக்கிறோம். இந்த நாட்டை சிறுமைப்படுத்திய 19 ஆவது திருத்தத்தை உடனடியாக இரத்து செய்து கூடிய வகையில் விரைவில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தொடர்பாகவும் எமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம்
என நிபுண ரணவக்க குறிப்பிட்டார்.
அவரின் பிரேரணையின் பின்னர் ஆரம்பமான விவாதத்தில், அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.