by Bella Dalima 14-08-2020 | 8:10 PM
Colombo (News 1st) சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராஜதந்திரப் போட்டி பல்வேறு விதங்களில் வௌிப்படுகின்றது.
அமெரிக்க சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசார், தாய்வான் விஜயத்தை நிறைவுசெய்து கொண்ட பின்னர் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை ஒன்றை சீனா விடுத்தது.
நெருப்புடன் விளையாட வேண்டாம் என்ற வகையில் அந்த எச்சரிக்கை அமைந்திருந்தது.
1979 ஆம் ஆண்டின் பின்னர் தாய்வானுக்கு பயணம் செய்த அமெரிக்காவின் உயர் அதிகாரியாக அலெக்ஸ் அசார் பதிவாகியுள்ளார்.
அவர் தாய்வானில் தங்கியிருந்தபோது தாய்வானின் உத்தியோகபூர்வமற்ற எல்லைப் பகுதியில் சீனாவின் போர் விமானங்கள் சில பறந்தன.
அமெரிக்க பிரதிநிதி நாட்டிலிருந்து வெளியேறியவுடன் சர்வதேச இறைமையை பாதுகாக்கும் நோக்கு எனத் தெரிவித்து தாய்வானை அண்மித்து சீனா யுத்தப் பயிற்சிகளை ஆரம்பித்தது.
யுத்தப் பயிற்சிகளில் ஈடுபட்ட விமானங்களை திருப்பி அனுப்ப தாம் நடவடிக்கை எடுத்ததாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
இது அமெரிக்காவால் சீனாவைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு என விமர்சகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
தாய்வானுடன் தொடர்புகளைப் புதுப்பித்துக்கொள்வதற்கு முன்னர் அமெரிக்காவினால் சீனாவுக்கு எதிராக பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.
தென் சீனக் கடலில் அமெரிக்காவின் அழுத்தங்கள் உக்கிரமடைந்தால் சீனா போர் பயிற்சிகளை தென் சீனக் கடலில் முன்னெடுக்க முயலும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீன இராணுவம் கடந்த வருடம் மே மாதம் தென் சீனக்கடலிலுள்ள யொன்ஷூ தீவை அண்மித்து JK 500 ரக அபாய அறிவிப்பு கட்டமைப்பை ஸ்தாபித்திருந்தது.
யொன்ஷூ தீவு, நமது நாட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்தைப் போன்றதாகும்.