கத்தாரிலிருந்து 13 பேர் நாடு திரும்பினர்

கத்தாரிலிருந்து 13 பேர் நாடு திரும்பினர்

by Staff Writer 03-08-2020 | 2:45 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக கத்தாரில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று (03) நாடு திரும்பியுள்ளனர். டோஹாவிலிருந்து 13 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜப்பானின் நரிட்டாவிலிருந்து ஒருவரும் இன்று நாட்டை வந்தடைந்ததாக அவர் குறிப்பிட்டார். இவர்கள் அனைவரையும் PCR பரிசோதனைகளின் பின்னர், கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்திசெய்த 55 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 29,121 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டில் 33 கண்காணிப்பு முகாம்கள் தற்போது இயங்குவதாகவும் அங்கு 2,294 பேர் கண்காணிப்பின் கீழுள்ளதாகவும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுடன் மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் பொலன்னறுவை - லங்காபுர பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நோயாளருடன் தொடர்பினை ஏற்படுத்திய ஒருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய 7 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,823 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 2,514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.