by Staff Writer 29-07-2020 | 1:48 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவித்துள்ளார்.
தற்போதைய நிர்வாகம் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படாததன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் இன்று (29) வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் அரசியலமைப்பிற்கிணங்க, உப தலைவர்கள் இருவருக்கும் சம்பிரதாயபூர்வமாக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட்டில் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் நிகழ்காலத்தில் தமக்கு எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் தாம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது போன்று உணர்ந்துள்ளதாகவும் கே.மதிவாணன் தமது அறிக்கையினூடாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், செயற்குழுக் கூட்டங்கள், நிர்வாகக்குழு கூட்டங்கள், நிதி கொடுக்கல் வாங்கல் விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள் உட்பட ஏனைய சந்தர்ப்பங்களில் தமது எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டினூடாக தாம் அடைந்த உயர்மட்ட நற்பெயருக்கு இதனால் எதிர்காலத்தில் களங்கத்தை ஏற்படுத்திக்கொள்ள தாம் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடப்படும் விடயங்களை உள்ளடக்கிய எழுத்துமூல ஆவணங்களை நிறைவேற்றுக் குழு கூட்டங்களுக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என்ற நியதி இதுவரை பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனூடாக குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து கருத்துகளை முன்வைக்க கால அவகாசம் வரையறுக்கப்பட்டுள்ளதால் சமகால நிர்வாகத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக உண்மையாக உழைத்த தாம் சமகால நிர்வாகத்தில் தொடர்ந்தும் மனசாட்சியுடன் செயற்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டுக்காக கௌரவமிக்க பணியை ஆற்றக்கூடிய தினம் உதயமானால் அந்த நாளில் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளதாகவும் கே.மதிவாணன் அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார்.