by Staff Writer 28-07-2020 | 10:33 PM
Colombo (News 1st) நிட்டம்புவையில் இடம்பெற்ற காணிப் பிரச்சினை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் நேற்று (27) தகவல்களை வௌியிட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய 32 ஏக்கர் காணிக்கு உரிமை கோரும் இரண்டு தரப்பினர் உள்ளனர்.
எனினும், இந்த காணி யாருக்கு சொந்தமானது என்பது தற்போதுள்ள பிரச்சனையல்ல.
காணியின் உண்மையான உரிமையாளருக்கு என்ன நடந்தது என்பதே இங்குள்ள பிரச்சினை.
கோடீஷ்வர வர்த்தகரான குறித்த காணியின் உண்மையான உரிமையாளர் சில மாதங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையின் மர்மத்திற்கு பின்னால் அரசியல் பிரச்சினை மறைந்துள்ளதா?
கிறிஸ்டோஃபர் அஷோக்க தசநாயக்க மிகப் பெறுமதி வாய்ந்த பல சொத்துக்களுக்கு உரிமையுடைய வர்த்தகராவார்.
இந்த கோடீஷ்வர வர்த்தகர் கொழும்பு - கொள்ளுப்பிட்டி T.G.ஜயவர்தன மாவத்தையிலுள்ள பிரம்மாண்டமான வீட்டில் இருந்தபோது கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தாக்குதலுக்கு இலக்கானார்.
கத்திக்குத்து, துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வர்த்தகர் நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டன.
2006 ஆம் ஆண்டு அவரது மகன் அமெரிக்காவில் விபத்திற்குள்ளாகி உயிரிழந்தார்.
மனைவி சுகயீனமடைந்து இலங்கையில் உயிரிழந்த நிலையில், வர்த்தகர் மாத்திரம் தனித்து வசித்து வந்துள்ளார்.
கோடீஷ்வர வர்த்தகரின் கொலை தொடர்பில் இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக கடந்த மே மாதம் பத்திரிகைகள் செய்தி வௌியிட்டன.
இந்த வர்த்தகருக்கு கொழும்பில் உள்ள மாளிகைக்கு மேலதிகமாக நிட்டம்புவையில் 32 ஏக்கர் காணியும் இருந்தது.
வர்த்தகரின் கொலைக்கு பின்னர் கொழும்பிலுள்ள வீட்டில் அன்ரூ சமரகோன் என்பவர் வசித்து வருகின்றார்.
தற்போது நிட்டம்புவ காணி தொடர்பில் அன்ரூ சமரகோன் மற்றும் கோடீஷ்வர வர்த்தகருக்கு நெருக்கமானவரும் உறவினருமான தனசிறி விஜேசிங்க ஆகியோருக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தனசிறி விஜேசிங்க கூறும் வகையில், இந்தக் காணி அவருக்கு அன்பளிப்பாகக் கிடைத்துள்ளது.
கடந்த வார இறுதியில் நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் காணிக்குள் நுழைந்த அன்ரூ சமரகோனுக்கு அங்கு தங்கியுள்ள தனசிறி விஜேசிங்க தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
வார இறுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தனசிறி மற்றும் திலங்க ஆகியோரை பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் தற்போது விளக்கமறியலில் உள்ளனர்.
உரிமையாளர் கொலை செய்யப்பட்ட நிலையில், மிகவும் பெறுமதியான சொத்திற்கு தற்போது இரண்டு தரப்பினர் உரிமை கோருகின்றனர்.
அனைத்திற்கும் மத்தியில், கோடீஸ்வர வர்த்தகர் கிறிஸ்டோஃபர் அஷோக்க தசநாயக்கவின் கொலை இன்னமும் மர்மமாக உள்ளது.
அந்த மர்மம் என்ன?