Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,631 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (13) 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா தொற்றாளர்கள் என சந்தேகப்படும் 112 பேர் இன்று காலை வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான 106 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சேனபுர மத்திய நிலையத்திற்கு மாற்றப்பட்ட 76 கைதிகளுக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து, வருகை தந்து தனிமைப்படுத்தும் நிலையத்தில் தங்கியிருந்த ஒருவர், பங்காளாதேஷில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர், புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த 14 பேர் பெலாரஸிலிருந்து வருகை தந்த 5 பேர் ஈரானிலிருந்து வருகை தந்த 2 மாலுமிகள் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது
625 நோயாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 1,981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவான இராஜாங்கனையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரச அலுவலகங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில், தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக இராஜாங்கனை பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிய அதிகாரிகளுடன் தொடர்புகளை பேணிய 33 பேர் நேற்று 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தமன்கடுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 8 பிரிவுகள், சங்கபோதிகம மற்றும் சுவாகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
9 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனியார் வர்த்தக நிலையத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களில் அடங்குவதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பொலன்னறுவை - உணகலாவெஹேர ரஜமகா விகாரையும் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறித்த விகாரைக்கு வருகை தந்த ஒருவர் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கந்தக்காடு இராணுவ முகாமுடன் இணைந்த வகையில் சேவையாற்றிய சிப்பாய்கள் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தெஹியத்தகண்டிய தியத்தலாவ மற்றும் சேருபிட்டிய உள்ளிட்ட கிராமங்களில் அவர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்தியநிலையத்தில் பணியாற்றியதுடன் விடுமுறை நிறைவுற்று இராணுவ முகாமிற்கு திரும்பிய நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நியூஸ்பெஸ்டின் செய்தியாளர் கூறினார்.
இதேவேளை குறித்த கிராமங்களை அண்மித்த பகுதிகளில் வாழ்பவர்கள் இன்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த கொரோனா கொத்தணி சற்று பெரியதாகும். கைதிகளைப் பார்வையிடச் சென்றவர்களின் உறவினர்கள் மற்றும் அங்கு பணிபுரிந்த உத்தியோகத்தர்களால் நாட்டின் பல பகுதிகளிலும் தொற்று பரவியுள்ளமை தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் நோய் சமூகத்தில் பரவுவது தொடர்பிலான பாரிய ஆபத்து உள்ளது. இதில் முக்கிய குழுவினர் அனுராதபுரத்தின் இராஜாங்கனை பகுதியில் பதிவாகியுள்ளனர். இது சிறுநீரக நோயாளர்கள் அதிகமாக உள்ள பகுதி. இந்த சிறுநீரக நோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் சிலவேளை உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையைத் தோற்றுவிக்கும். கடந்த நாட்களில் பதிவாகிய 11 மரணங்களில் இரண்டு மரணங்கள் இந்த சிறுநீரக நோயாளர்களிடையே பதிவாகியது
என தேசிய தொற்று நோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் எரங்க நாரங்கொட தெரிவித்துள்ளார்.