3 மாதங்களின் பின்னர் பாடசாலைகள் நாளை மீள திறப்பு

3 மாதங்களின் பின்னர் பாடசாலைகள் நாளை மீள திறப்பு

by Staff Writer 28-06-2020 | 1:20 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (29) மீண்டும் திறக்கப்படவுள்ளன. 4 பிரிவுகளாக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக, அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அடுத்த வாரத்திற்குள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த காலப்பகுதிக்குள் சமூக இடைவௌியுடன் வகுப்பறைகளை ஒழுங்குப்படுத்துதல் அவசியம் என கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். இதனை தவிர, கைகளை கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன் பாதுகாப்புடன் கூடிய பாடசாலை வளாகத்தை அமைத்தலும் அவசியமாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர், குறித்த சுகாதார வழிகாட்டல்கள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்காணிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த குறிப்பிட்டுள்ளார்.