by Staff Writer 23-06-2020 | 8:13 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக அவன்ற் கார்ட் விசாரணை தொடர்பில் தன் மீது எவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று கேள்வி எழுப்பினார்.
ஊழல்மிகு கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், இந்த ஆணைக்குழு முன்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆணைக்குழு தண்டனைகளை வழங்காது எனவும் விடயங்களை ஆராயும் செயற்பாட்டை மாத்திரமே மேற்கொள்வதாகவும் அரசாங்கத் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப கடந்த அரசாங்கக் காலத்தின் போதான அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி சந்திரா ஜயதிலக்க மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ அதன் ஏனைய உறுப்பினர்களாவர்.
இந்த ஆணைக்குழுவில் அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதி தாக்கல் செய்த முறைப்பாட்டினையடுத்து, கடந்த அரசாங்க காலத்தில் இந்த நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அரசியல் பழிவாங்கல் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அனுரகுமார திசாநாயக்க, அர்ஜூன ரணதுங்க, ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார ஆகியோர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் இன்று ஆணைக்குழுவில் தமது அடிப்படை ஆட்சேபனையை வௌியிட்டனர்.
தன்னை பிரதிவாதியாக பெயரிட்டுள்ளமைக்கு எதிராக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார ஆணைக்குழு முன்பாக வாய்மொழி மூலம் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரியாக செயற்பட்ட தன்னை சாட்சி விசாரணைக்கு அழைத்தமை கவலைக்குரிய விடயம் என அவர் குறிபிட்டுள்ளார்.
தேவை என்றால் தனது ஒத்துழைப்பை வழங்கும் வகையில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார குறிப்பிட்டுள்ளார்.
தமது தரப்பினர் இந்த விடயத்தில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக முறைப்பாட்டாளரின் சாட்சியின் பிரதி அவசியம் என ராஜித சேனாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க குறிப்பிட்டார்.
அந்த பிரதியை ஆராய்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் தேவை எனவும் சட்டத்தரணி அறிவித்தார்.
அதன் பின்னர் ஆணைக்குழுவில் ஆஜராகுவதா, இல்லையா என்பதனை தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவன்ற் கார்ட் ,மெரிடைம் சேர்விசஸ் நிறுவன சம்பவம் தொடர்பிலான விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ஆணைக்குழுவின் தலைவர், விடயத்திற்கு பொறுப்பான காரணத்திற்காகவே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் எந்தவொரு காரணத்திற்கும் மீண்டும் இந்த விடயம் ஆய்வு செய்யப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தன்னை பிரதிவாதியாகப் பெயரிட்டமைக்கான காரணங்கள் தனக்குத் தெரியாது என அனுரகுமார திசாநாயக்க ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தன்னை பிரதிவாதியாகப் பெயரிடுவதற்கு காரணமான முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டினை, தமக்கு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முறைப்பாட்டாளர் அரச அதிகாரி இல்லை என்பதால், ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அவன்ற் கார்ட் மெரிடைம் சேர்விசஸ் நிறுவனத்தின் சம்பவம் எவ்வாறு உள்வாங்கப்பட்டது என அவர் கேள்வி எழுப்பினார்.
அர்ஜுன ரணதுங்க இந்த சம்பவத்தில் ஏன் பிரதிவாதியாக பெயரிடப்பட்டார் என்பதற்கான காரணத்தை அறிவிக்குமாறு, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆணைக்குழுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
முறைப்பாட்டாளரின் பிரதியை ஆராய்வதற்கு காலவரையறை அவசியம் எனவும் ஆணைக்குழுவிற்கு மதிப்பளிக்கும் வகையில் தமது தரப்பு நபர் ஆணைக்குழுவில் ஆஜரானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதிவாதிகளுக்கு தேவையான அனைத்து பிரதிகளையும் வழங்குமாறு விடயங்களை ஆராய்ந்த ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.
சாட்சி விசாரணையை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் நடத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்தது.