ஒப்பந்தங்களில் அரசாங்கம் கைச்சாத்திடாது

அரசியலமைப்பிற்கு எதிரான ஒப்பந்தங்களில் அரசாங்கம் கைச்சாத்திடாது: பந்துல தெரிவிப்பு

by Staff Writer 18-06-2020 | 8:55 PM
Colombo (News 1st) MCC ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் உண்மை இல்லை என இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதிகாரத்தில் இருந்த காலத்தில் 48 மில்லியனுக்கு இந்த MCC ஒப்பந்தத்தை தயாரித்தது. இந்த நாட்டின் சுயாதீனம் , இறையாண்மையை அழித்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர் என அந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் குற்றம் சுமத்தியிருந்தோம். அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுடனும் அரசியலமைப்பிற்கு எதிரானதும் நாட்டின் சட்டத்தைப் புறந்தள்ளக்கூடியதுமான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது
என பந்துல குணவர்தன தெரிவித்தார். MCC ஒப்பந்தத்தின் கீழ் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி நாட்டிற்கு கிடைக்கும். ஆனால், குறித்த நிதியை நிதி வழங்குனர் கூறுகின்ற இரண்டு திட்டங்களுக்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என்பது இந்த நன்கொடையைப் பெற்றுக்கொள்ளும்போதுள்ள பிரதான பிரச்சினையாகும். ஒன்று, நாட்டின் போக்குவரத்து முறைமையை மேம்படுத்துவதும் மற்றையது காணி தொடர்பிலான சட்ட விதிமுறைகளை மறுசீரமைப்பதற்கான துறைசார் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதுமாகும். இந்த நிதி நன்கொடையை ஒத்ததா அல்லது அவர்கள் கூறும் வகையில் செயற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது. இந்நிலையில், அமெரிக்க தூதரகத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் நேற்று (17) வினவியபோது MCC தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோரியதாகத் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்தது.