by Bella Dalima 16-06-2020 | 5:08 PM
Colombo (News 1st) பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப அரசினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஒத்துழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் தலைமையிலான சிரேஷ்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்கள் குறித்து தௌிவுபடுத்தியுள்ளார்.
மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்காமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் தௌிவுபடுத்துமாறு ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான நிதி மற்றும் நிதிக்கொள்கையை திட்டமிடுவதற்கான பொறுப்பு இலங்கை மத்திய வங்கியிடமும் திறைசேரியிடமுமே காணப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்கு நாடுகளின் மத்திய வங்கியே பொறிமுறைகளை அறிமுகப்படுத்துவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை மத்திய வங்கி அவ்வாறான வழிகாட்டல்களை முன்வைப்பதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நெருக்கடியை வெற்றிகொள்வதற்கான வழிகாட்டல்களை தாமதமின்றி தனக்கு அறிவிக்குமாறும், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.