4 சிறைச்சாலைகளில் அதிரடி சோதனை...

4 சிறைச்சாலைகளில் அதிரடி சோதனை;  82 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றல்

by Staff Writer 10-06-2020 | 12:30 PM
Colombo (News 1st) நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூசா சிறைச்சாலைகளில் நேற்று (09) நடத்தப்பட்ட விசேட சோதனைகளில் 82 கையடக்கத் தொலைபேசிகள், 55 சிம் அட்டைகள், பெற்றரிகள் மற்றும் சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 61 கையடக்கத் தொலைபேசிகள், 51 சிம் அட்டைகள், 30 சார்ஜர்கள், 71 பெற்றரிகள் மற்றும் 16 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டது. இதேவேளை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 2 கையடக்கத் தொலைபேசிகள், போகம்பர சிறைச்சாலையில் இருந்து 4 கையடக்கத் தொலைபேசிகள், மெகசின் சிறைச்சாலையில் இருந்து 11 கையடக்கத் தொலைபேசிகள், பூசா சிறைச்சாலையில் இருந்து 3 கையடக்கத் தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள், 4 பெற்றரிகள் மற்றும் சார்ஜர் என்பன சிறைச்சாலை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. பூசா சிறைச்சாலையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கொஸ்கொட தாரக்க, கௌத்தம், சூசை மற்றும் ஜோர்ஜ் உள்ளிட்ட கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கூடங்களில் இருந்து இந்த கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வெலேசுதாவின் சிறைக்கூடத்தில் இருந்து சிம் அட்டையொன்றையும் சிறைச்சாலைகள் அதிகாரிகள் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட தொலைபேசி மற்றும் சிம் அட்டை என்பனவற்றை பகுப்பாய்வுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.