by Bella Dalima 21-05-2020 | 7:56 PM
Colombo (News 1st) இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷை தாக்கிய ஆம்பன் சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 72 பேரும் பங்களாதேஷில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இத்தகையதொரு பாரிய சூறாவளியை தனது வாழ்நாளில் காண்பது இதுவே முதன்முறையென மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமது மாநிலத்திற்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடியை மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கல்கத்தாவில் சுமார் 14 மில்லியன் மக்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், அதிசக்தி வாய்ந்த ஆம்பன் சூறாவளியினால் இந்தியா மற்றும் பங்களாதேஷிலுள்ள சுமார் 19 மில்லியன் சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக UNICEF அமைப்பு தெரிவித்துள்ளது.