COVID-19 காரணமாக முஸ்லிம்கள் மரணித்தால் உரிய கண்காணிப்புடன் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை

by Staff Writer 08-05-2020 | 8:25 PM
Colombo (News 1st) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. COVID-19 காரணமாக மரணித்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்து, தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் COVID-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, இந்த சவாலான காலத்தில், அயராது உழைத்து, பணிபுரியும் அனைத்து சுகாதார அதிகாரிகளினதும் அர்ப்பணிப்பான சேவையை பாராட்டுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களின் படி, 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்படுத்தப்படுகின்ற விதத்தைப் போன்று, COVID-19 காரணமாக ஒரு முஸ்லிம் மரணித்தால், உரிய பாதுகாப்பு முறையின் கீழ், பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.