21 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு

21 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

by Staff Writer 28-04-2020 | 7:00 PM
Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய 21 மாவட்டங்களில் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த பகுதிகளில் இன்று (28) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படுவதைப் போன்று, மே மாதம் முதலாம் திகதி வரை நாளாந்தம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவெளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை மே மாதம் 4 ஆம் திகதி முதல் திறக்கும் வகையில், ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கும், தனியார் பிரிவின் தொழிற்சாலைகள், கட்டட நிர்மாண வர்த்தகங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை வியாபாரங்ளை நடத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முற்பகல் 10 மணிக்கு தனியார் நிறுவனங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு பின்னர், நிறுவனங்களை நடாத்திச்செல்லும் விதம் குறித்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், அடுத்த வாரத்திற்குள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த நிறுவனங்களின் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே சேவைக்கு உள்வாங்கப்பட வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களில் தொழிலுக்கு செல்லாதவர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலுக்கு செல்வோருக்கு மாத்திரமே இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனையவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில், அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்வோர் அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்வதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கொள்வனவுக்காக மாத்திரமே வீடுகளில் இருந்து வௌியேற முடியும் என கூறப்பட்டுள்ளது. தாம் வசிக்கும் பகுதியில் இருந்து நடந்து செல்லக்கூடிய, மிக அருகிலுள்ள விற்பனை நிலையங்களை தெரிவுசெய்து பொருட்கொள்வனவில் ஈடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது., பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.