இலங்கை வக்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை வக்பு சபை சகல மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும் விடுத்துள்ள அறிவிப்பு

by Staff Writer 20-04-2020 | 6:53 PM
Colombo (News 1st) ரமழானுக்கான பணிப்புரைகளை இலங்கை வக்பு சபை சகல மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று இலங்கை வக்பு சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் ரமழான் மாதம் முழுவதற்கும் அல்லது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இமாம் , முஅத்தின்மார் அல்லாத எந்த பொதுமக்களுக்காகவும் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம் என வக்பு சபை ஆலோசனை வங்கியுள்ளது. ஜும்ஆ தொழுகை, ஐவேளை தொழுகை, தராவீஹ் தொழுகை உட்பட எதுவிதமான கூட்டுத் தொழுகைகளையும் நடத்த வேண்டாம் என்றும் அந்த சபை பணிப்புரை விடுத்துள்ளது. இஃப்தார் நிகழ்ச்சி போன்ற எதுவித ஒன்றுகூடல்களையும் நடத்த வேண்டாம் என்றும் மஸ்ஜித்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் உள்ளோ அல்லது வளாகத்தின் உள்ளோ, கஞ்சி காய்ச்சவோ அல்லது கஞ்சி பகிர்ந்தளிக்கவோ வேண்டாம் என்றும் வக்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. பள்ளி ஜமாத் அங்கத்தவர்களுக்கும் இந்த பணிப்புரைகள் பற்றி முறைப்படி அறிவிக்குமாறும், COVID-19 தொடர்பான சுகாதார அமைச்சினாலும் பாதுகாப்புத் தரப்பினராலும் வழங்கப்படும் பணிப்புரைகளையும் வழிகாட்டல்களையும் பற்றி ஜமாத் அங்கத்தவர்களுக்கு தெளிவூட்டுவதோடு அவற்றைப் பின்பற்றியொழுகுமாறு மக்களை ஊக்கப்படுத்துமாறும் இலங்கை வக்பு சபை அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் பணித்துள்ளது.