by Bella Dalima 18-04-2020 | 5:18 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
6 நோயாளர்கள் நேற்று (17) அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்று குணமடைந்த நிலையில், நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, வட மாகாணத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வட மாகாணத்திலுள்ள சுமார் 50 பேருக்கு இன்று PCR பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.
இதேவேளை, தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 115 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 3954 பேர் கண்காணிப்பின் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
புனானை கண்காணிக்கும் நிலையத்திலிருந்து 106 பேரும் கடற்படையின் பூசா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 09 பேரும் அடங்கலாக 115 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
18 தனிமைப்படுத்தல் முகாம்களில் 1484 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.