மட். போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அறிவித்தல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

by Staff Writer 11-04-2020 | 5:01 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, நோயாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலிருந்து புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டவர்கள், 2 வாரங்கள் தாமதித்து வருமாறு வைத்தியசாலை கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன், 2 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கிளினிக் பராமரிப்பிலுள்ளவர்களை தமக்கு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 2 அல்லது 3 வாரங்கள் தாமதித்து வருகைதருமாறும் மட்டக்களப்பு வைத்தியசாலை அறிக்கையூடாக கேட்டுக் கொண்டுள்ளது. இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு வழங்கப்பட்ட உரிய திகதியில் தவறாது சமூகமளிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறு பிள்ளைகள் தவிர்ந்த ஏனைய நோயாளர்கள் வேறு நபர்களை அழைத்துவருவதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய புற்றுநோய் வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெறுபவர்களில் இரத்தப் புற்றுநோயாளர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் அவசர நிலைமைகள் ஏற்படுமிடத்து தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொலைபேசி இலக்கமொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 065 2224461 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு நோயாளர்கள் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.