by Bella Dalima 10-04-2020 | 8:45 PM
Colombo (News 1st) வட இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள மக்கள் இமாலய மலைத்தொடரை பிரமிப்புடன் பார்க்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு வளி மாசடைவு குறைவடைந்துள்ளது.
இதனால் 100 மைல் தொலைவிலிருந்து இமாலய மலைத்தொடர் கண்களுக்கு புலனாகின்றது.
ஜலந்தர் நகர் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் வழமைக்கு மாறாக தமது வீடுகளிலிருந்தே இமாலய மலைத்தொடரை கண்டு களிப்பதுடன், காண்பதற்கரிய இந்தக் காட்சியினை நிழற்படங்களாக சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்கின்றனர்.
வளி மாசடைவினால் இமாலயத்தின் சிகரப் பகுதி பல தசாப்தங்களாக மக்களுக்கு தென்படாத நிலையில், தற்போது மாசடைவு குறைவடைந்து வருவதால் காட்சிகள் தௌிவாக புலப்படுகின்றன.
COVID-19 தொற்று காரணமாக சர்வதேசத்திலுள்ள பல நாடுகளும் இந்தியாவும் முடக்கப்பட்டுள்ளதால் வளிமண்டலம் தூய்மையடைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கு உத்தரவினால் பல தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை , வீதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமை மற்றும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளமையினால் காற்று மாசு துரித கதியில் குறைவடைந்து வருகின்றது.
முடக்கல் உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் முதலாவது வார நிறைவில், பாரதத்தின் 85 பிரதான நகரங்களின் வளி மாசடைவு குறைவடைந்துள்ளதாக இந்திய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.