தீயினால் குருநாகல் வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்திற்கு பாரிய சேதம்

by Staff Writer 05-04-2020 | 7:31 PM
Colombo (News 1st) குருநாகல் வைத்தியசாலை வளாகத்திலுள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த மருந்து களஞ்சியத் தொகுதியில் இன்று முற்பகல் 11.15 அளவில் தீ பரவியது. தீயினால் மருந்து களஞ்சியத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தீ பற்றியவுடன் விரைந்து செயற்பட்ட வைத்தியசாலை பணியாளர்கள் களஞ்சியத்திலிருந்த மருந்துகளை வௌியேற்ற நடவடிக்கை எடுத்தனர். வைத்தியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மருந்துகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் இராணுவ சிப்பாய்களும் ஈடுபட்டனர். குருநாகல் நகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இரண்டு பௌசர்களும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மருந்து களஞ்சியத்தில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் ஒருவர் விஷக் கிருமி ஒழிப்பிற்கான TCL எனப்படும் இரசாயன பதார்த்தம் அடங்கிய நான்கு பாத்திரங்களைக் கொண்டு செல்வதற்கு தயாரான போது ஒரு பாத்திரம் தீ பற்றியதாக தீ அணைக்கப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. தீயை அணைப்பதற்காக நீர் விசிறப்பட்ட போதும், இரசாயன பதார்த்தம் வெடித்து, மூன்று அறைகள் மற்றும் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் அடங்கிய பெட்டிகளில் தீ பரவியுள்ளது. தீ பற்றிய கட்டடம் நான்கு மாடிகளைக் கொண்டதென்பதால், முதலாவது மாடிக்கு வௌியில் தீ பரவுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூன்றாவது மாடியில் சிக்கியிருந்த மருத்துவர்கள் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயினால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்பதுடன், எவருக்கும் காயங்களும் ஏற்படவில்லை.