by Staff Writer 17-03-2020 | 1:50 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளானோரை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஆலோசனையின் பேரில் IDH வைத்தியசாலைக்கு இணையான பிரிவொன்றை பொலன்னறுவையில் ஸ்தாபித்துள்ளதாக இராணுவத்தளபதி, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (17) மாலை முதல் நோயாளர்களை அங்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என இராணுவத்தளபதி கூறியுள்ளார்.
IDH வைத்தியசாலையில் மாத்திரமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் உள்ளனர். ஆனால், மட்டக்களப்பு, பொலன்னறுவையிலுள்ள கண்காணிப்பு மத்திய நிலையங்களிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால், IDH போன்றதொரு பிரிவை பொலன்னறுவையில் ஸ்தாபிக்குமாறு நேற்று முன்தினம் இலங்கை இராணுவத்திற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதாகவும் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவின் ஆலோசனையுடன், பொலன்னறுவை வைத்தியசாலையின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று மாலை முதல் அவ்வாறான நோயாளர்களை அங்கு அனுமதிக்க முடியும் எனவும் இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது விளக்கமளித்துள்ளார்.