இறுதி முடிவு எட்டப்படாமல் கூட்டம் நிறைவு

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக்குழு கூட்டம் இறுதி முடிவு எட்டப்படாமல் நிறைவு

by Staff Writer 07-03-2020 | 7:37 PM
Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக்குழு கூட்டம் கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற போதிலும் இறுதி முடிவு எட்டப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது. கடந்த பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களும் இம்முறை பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபன், எஸ்.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிவமோகன், சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞா.ஶ்ரீநேசன் ஆகியோர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளனர். கடந்த முறை தேசியப்பட்டியல் மூலம் தெரிவான சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா இம்முறை வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ச.குகதாசனும் போட்டியிடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.சத்தியலிங்கம் வன்னி தேர்தல் தொகுதியில் இம்முறை முதன்முறையாக பாராளுமன்றத் தேர்தலில் கமிறங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.