ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

by Staff Writer 05-03-2020 | 8:24 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் வீட்டில் கம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி தனது பிரசாரப் பணிகளை இன்று பிற்பகல் ஆரம்பித்தது. ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானத்தை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
நாம் நேற்று செயற்குழுவில் வேட்புமனு குழுவை நியமித்தோம். தலைவர், பிரதித் தலைவர், உப தலைவர், தேசிய அமைப்பாளர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது. ஒரே அணியாக செயற்படுவதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தினோம். நாம் கதவை திறந்து வைத்துள்ளோம். அவர்களும் தொடர்புபடலாம். நாம் அந்த அணிக்கு மற்றுமொரு யோசனையை முன்வைத்துள்ளோம். அந்த கட்சியின் யாப்பு மற்றும் எமது கட்சியின் யாப்பு ஆகியவற்றுக்கு அமைய இரு தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்துமாறு கூறியுள்ளோம். எமது வேட்புமனுக்களில் தேர்தல்கள் அணையாளர் அந்த கட்சிக்கு வழங்கியுள்ள கடிதம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இரு தரப்பு சட்டத்தரணிகள் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அப்படியில்லாவிட்டால் போட்டியிடும் ​வேட்பாளர்கள் பெயரை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்படலாம்
இதேவேளை, பொது சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதற்கே அனைவரும் இணங்கினர். அதனால், யானை சின்னம் தொடர்பில் தமக்கு பிரச்சினை இல்லை என பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி புதிய தலைமைத்துவத்தின் கீழ் புதிய பரிணாமத்துடன் வர வேண்டும் என மக்கள் கோரினர். பழைய முறையில் யானை சின்னத்தில் வந்தால் நாம் எதிர்பார்ப்பது நடக்காது அல்லவா என மக்கள் கேட்கின்றனர். நாம் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் மக்களின் வாக்குகள் தேவை. ஆகவே, யானையின் உரிமத்தை எமது கட்சிக்கு மாற்றித் தாருங்கள். வரலாற்றிலும் அது நடந்துள்ளது. மூன்று மாதம் பேச்சுவார்த்தை என கூறி பிற்போட்டனர். பொது சின்னத்தில் வருவோம், எவ்வித பிரச்சினையும் இல்லை. ஏற்கனவே எமது கட்சிக்கு பதிவு செய்யப்பட்ட சின்னமொன்று உள்ளது
என ரஞ்சித் மத்தும பண்டார மேலும் கூறினார்.