அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டு உண்மையற்றது

அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது: தமிழர் இயக்கம் அறிக்கை 

by Staff Writer 29-02-2020 | 9:06 PM
Colombo (News 1st) ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும் வட மாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழர் இயக்கம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. தமது இயக்கத்திற்கு எதிரான கருத்துக்களையும் தம்மை வேண்டுமென்றே புறக்கணித்ததாக அனந்தி சசிதரன் முன்வைக்கும் குற்றச்சாட்டையும் முற்றாக மறுதலிப்பதாக தமிழர் இயக்கம் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் தமது வாய்ப்பு தமிழர் இயக்கத்தின் ஐ.நா-விற்கான இணைப்பாளரினால் தன்னிச்சையாக தட்டிப்பறிக்கப்பட்டதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடன் நீண்ட காலமாக தமிழர் இயக்கம் செயற்பட்டு வருவதுடன் மக்களுக்கான அவரின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளதாக தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வழமை போன்று இம்முறையும் மேற்கொண்டிருந்ததாக தமிழர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இவ்விடயத்தை கையாளும் பொறுப்பு தமிழர் இயக்கத்தின் ஐ.நா விற்கான இணைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன் கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனந்தி சசிதரன் உள்ளிட்ட அனைவரையும் இணைப்பாளருடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு முற்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த அறிவுறுத்தல்களை பின்பற்ற அனந்தி சசிதரன் தவறியமையே அவருக்கு உரையாற்றுவற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமைக்கான காரணம் என தமிழர் இயக்கத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.